மாயவரத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் இரயில் பாதையில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்திற்கு கிழக்கே 2.5 கி. மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். பசு வடிவில் உமாதேவி பூசித்ததால் ஆவடுதுறை என்று பெயர் பெற்றது. இத்தலத்தில் உள்ள ரிஷபம் பெரிய வடிவம் உடையது. இத்தலத்தில் பல அரச மரங்கள் உள்ளது. அதனால் "படர்ந்த அரசு வளர்ந்த ரிஷபம்" என்ற பழமொழி இங்கே வழக்கத்தில் உள்ளது.
திருமூலர் திருமந்திரம் அருளிய திருத்தலம். திருஞானசம்பந்தர் தன் தந்தையின் வேள்விக்காக இறைவனிடம் பொற்காசு பெற்றுத் தந்த தலம். போகருடைய மாணவரான திருமாளிகைத்தேவர் பல அற்புதங்களை நிகழ்த்திய தலம். அவர் பகையரசனோடு போர் செய்ய இந்தக் கோயிலின் மதில் சுவரின் மேல் உள்ள நந்திகளை உயிர்ப்பித்து அனுப்பினார். அதுமுதல் இத்தலத்து மதில் சுவர் மேல் நந்திகள் இல்லாமல் போயிற்று. முசுகுந்த சக்கரவர்த்திக்கு மகப்பேறு அருளி அவருக்கு இத்தலத்தை திருவாரூராகவும், தம்மை தியாகராசராகவும் காட்டியருளிய தலம். தருமதேவதை இத்தலத்து இறைவனை வழிபட்டு அவருக்கு வாகனம் ஆனது. திருவாவடுதுறை ஆதீன தலைமை பீடம் இங்கே அமைந்துள்ளது. |